Sunday, 6 December 2015

கல்வியின் சிறப்பு


பாடம் : 43 அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் அவர்களில் பொதுமக்களுக்கும் நலம் நாடுவதுதான் மார்க்கம் (தீன்) ஆகும் எனும் நபிமொழி. அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நலம் நாடுபவர்களாயிருந்தால் (இயலாதவர்கள், நோயாளிகள் ஜிஹாதில் கலந்து கொள்ளாமல் இருப்பதில் குற்றமில்லை). (9:91).
57. 'நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலை நிறுத்துவதாகவும், ஸக்காத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நன்மையே நாடுவதாகவும் உறுதி மொழி எடுத்தேன்"ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
Book : 3
58. (முஆவியாவின் ஆட்சிக் காலத்தில் ஆளுனராக இருந்த) முகீரா இப்னு ஷுஅபா(ரலி) இறந்த நாளில் ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) எழுந்து மேடையில் நின்று இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, 'புதிய தலைவர் வரும் வரை இணையற்ற ஏக இறைவனுக்கு அஞ்சுவதையும், அடக்கத்தையும், அமைதியையும் கடமையாகக் கொள்ளுங்கள். இதோ இப்போது உங்களின் புதிய தலைவர் வந்து கொண்டிருக்கிறார்' என்றார்.
பின்னர் தொடர்ந்து, '(இறந்த) தலைவருக்காகப் பிழை பொறுக்கத் தேடுங்கள். ஏனெனில் அவர், பாவம் மன்னிக்கப்படுவதை விரும்பக்கூடியவராக இருந்தார்' என்றார். மேலும், 'நான் ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் சென்று 'இஸ்லாத்தைத் தழுவுவதாகத் தங்களிடம் உறுதி மொழி எடுக்க வந்திருக்கிறேன்' என்றேன். அப்போது அவர்கள், 'முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்' என்று எனக்கு நிபந்தனை விதித்தார்கள். அதன்படி உறுதி மொழி கொடுத்தேன். இந்தப் பள்ளி வாசலுக்கு உரியவன் மீது ஆணையாக நிச்சயமாக நான் உங்களுக்கு நலம் நாடுபவனாக இருக்கிறேன்' என்றார்.
பின்னர் பாவமன்னிப்புத் தேடியவர்களாக (மேடையைவிட்டு) இறங்கினார்கள்" ஜியாத் இப்னு இலாகா அறிவித்தார்.
Book :3
பாடம் : 1 கல்வியின் சிறப்பும் உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும் கல்விஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துகிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறான் எனும் (58:11ஆவது) இறை வசனமும். வல்லோனும் மாண்புடையோனுமாகிய அல்லாஹ் கூறுகின்றான்: என் இறைவா! கல்விஞானத்தை எனக்கு அதிகமாக்குவாயாக! என்று (நபியே!) நீர் பிரார்த்திப்பீராக! (20:114). பாடம் : 2 ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது யாராவது ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கேள்விகேட்டால், அவர் தம் பேச்சை முடித்துக்கொண்டு, பிறகு கேள்வி கேட்பவருக்கு பதிலளிக்கலாம்.
59. 'ஓர் அவையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தபோதுஅவர்களிடம் நாட்டுப் புறத்து அரபி ஒருவர் வந்தார். 'மறுமை நாள் எப்போது?' எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர் 'நபி(ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; எனினும் அவரின் இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை' என்றனர். வேறு சிலர், 'அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை' என்றனர். முடிவாக நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சை முடித்துக் கொண்டு, 'மறுமை நாளைப் பற்றி (என்னிடம்) கேட்டவர் எங்கே?' என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்)' இறைத்தூதர் அவர்களே! இதோ நானே' என்றார். அப்போது கூறினார்கள்.' அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர் பார்க்கலாம்." அதற்கவர், 'அது எவ்வாறு பாழ் படுத்தப்படும்?' எனக் கேட்டதற்கு, 'எந்தக் காரியமாயினும் அது, தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 3
பாடம் : 3 உரத்த குரலில் கல்விபோதிப்பது.
60. 'நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே வந்து கொண்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் உளூச் செய்து கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்ணீரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக் கண்டதும்) 'குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்!' என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்தி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்
Book : 3
61. 'மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்?' என்று நபி(ஸல்) கேட்டார்கள். அப்போது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை பேரீச்சை மரம்தான் என்று கூற வெட்கப்பட்டு அதைச் சொல்லாமல் இருந்தேன். பின்னர் 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள்' என தோழர்கள் கேட்டார்கள்.

No comments:

Post a Comment